தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்


தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:59 AM GMT (Updated: 30 Oct 2019 4:59 AM GMT)

தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ந் தேதி வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் போதும் என்ற நிலையில், இருகட்சிகளின் பலம் 161 ஆக இருப்பதால், அந்த கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவியிலும் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, இது தொடர்பாக அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறினார். ஆட்சியில் சமபங்கு தொடர்பாக பா.ஜனதா எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மும்பை ஒர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்ற நிலையில், அவரை முதல்-மந்திரியாக்க சிவசேனா விரும்புகிறது.

சிவசேனா கோரிக்கை தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் மவுனம் காத்து வந்த நிலையில், நேற்று முதன் முறையாக அப்படி ஒரு ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கு இடையே செய்யப்படவில்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்கமாக நிராகரித்தார். அடுத்த 5 ஆண்டுகளும் நான் தான் முதல்-மந்திரியாக நீடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். முதல்-மந்திரியின் அறிவிப்பை அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்று மாலை 4 மணிக்கு பா.ஜனதாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை சிவசேனா திடீரென ரத்து செய்தது.

தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வரும் சூழலில்,  தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் மந்திரியாக பதவியேற்க கூடும் என்று கூறப்படுகிறது.  மேலும், தற்போது கருத்து வேறுபாடு நிலவினாலும் ஆட்சி அமைத்த பிறகு சிவசேனா எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார். 

Next Story