போக்குவரத்து துறையை சீரமைக்க தமிழகத்துக்கு ஜெர்மனி ரூ.1,580 கோடி நிதி - 2,713 புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை


போக்குவரத்து துறையை சீரமைக்க தமிழகத்துக்கு ஜெர்மனி ரூ.1,580 கோடி நிதி - 2,713 புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2019 11:30 PM GMT (Updated: 2 Nov 2019 10:15 PM GMT)

போக்குவரத்து துறையை சீரமைக்க தமிழகத்துக்கு ஜெர்மனி ரூ.1,580 கோடி வழங்குகிறது. இதைக்கொண்டு 2,713 புதிய பஸ்கள் வாங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

ஐரோப்பிய நாடுகளில் முக்கிய பொருளாதார நாடாக திகழ்கிற ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் தலைநகர் டெல்லிக்கு வந்துள்ள இந்த தருணத்தில், டெல்லி இதுவரை இல்லாத வகையில், வாகனங்கள், தொழிற்சாலை, கட்டுமானப்பணிகள் போன்றவற்றால் வெளியிடப்படுகிற மாசு காரணமாக, காற்று மிக மோசமான நிலையில் உள்ளது.

பிரதமர் மோடியை நேற்று முன்தினம் ஏஞ்சலா மெர்கல் சந்தித்து பேசினார். அப்போது 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அது மட்டுமின்றி 5 கூட்டு பிரகடனங்களும் வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கியமானது, பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டின் மூலம் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கானது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசினார்.

அப்போது அவர் டீசலைக்கொண்டு இயங்குகிற பஸ்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலை பேணுகிற விதத்தில் மின்சார பஸ்களை இயக்குவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பருவநிலையை பாதுகாக்கவும், நகர்ப்புறங்களில் பசுமை போக்குவரத்தை ஏற்படுத்தவும் ஒத்துழைப்பதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இதற்காக 1 பில்லியன் யூரோ (சுமார் ரூ.7,900 கோடி) ஒதுக்கி உள்ளோம்” என கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, “தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையை சீரமைப்பதற்காக ஜெர்மனி 200 மில்லியன் யூரோ (சுமார் ரூ.1,580 கோடி) வழங்குகிறது” என கூறினார்.

ஜெர்மனியின் நிதி ரூ.1,580 கோடியை பயன்படுத்தி முதல் கட்டமாக பி.எஸ்-6 தரம் கொண்ட 2,213 புதிய பஸ்களையும், 500 மின்சார பஸ்களையும் வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பான திட்ட ஒப்பந்தம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும், ஜெர்மனி வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மின்சார பஸ்களுக்கான மின் ஏற்று கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து துறையை மேம்படுத்திட மென்பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல் செய்தல், பயணிகள் தகவல் அமைப்பை ஏற்படுத்துதல், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகர்களின் உதவியைப் பெறுதல், பணமில்லா பயண சீட்டு முறை உருவாக்குதல் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story