அயோத்தியில் மசூதியுடன் இஸ்லாமிய பல்கலைக்கழகமும் கட்ட வேண்டும் - முஸ்லிம் மத குருக்கள் வலியுறுத்தல் + "||" + Islamic University to build mosque in Ayodhya - Muslim clerics insist
அயோத்தியில் மசூதியுடன் இஸ்லாமிய பல்கலைக்கழகமும் கட்ட வேண்டும் - முஸ்லிம் மத குருக்கள் வலியுறுத்தல்
அயோத்தியில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மசூதியுடன் இஸ்லாமிய பல்கலைக்கழகமும் கட்ட வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரியிடம் முஸ்லிம் மத குருக்கள் வலியுறுத்தினர்.
லக்னோ,
அயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதில், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முஸ்லிம் அமைப்புகளுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை ஏற்பது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம், சன்னி வக்பு வாரியம் போன்ற முக்கியமான முஸ்லிம் அமைப்புகள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதே சமயத்தில், மசூதியுடன் சேர்த்து இஸ்லாமிய பல்கலைக்கழகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் மத குருக்கள் சிலர் எழுப்பி உள்ளனர்.
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை மவுலானா சல்மான் உசைன் நக்வி உள்ளிட்ட முஸ்லிம் மத குருக்கள் சந்தித்தனர். அப்போது, அயோத்தியில் 1991-ம் ஆண்டு அரசாங்கம் கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தில் மசூதியுடன் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றையும் கட்டவேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், தீர்ப்பை தொடர்ந்து, அமைதியை பராமரித்ததற்காக, யோகி ஆதித்யநாத்தை அவர்கள் பாராட்டினர்.
அதற்கு யோகி ஆதித்யநாத், நல்லிணக்கத்தை பராமரிக்க தனது அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். சமூகத்தில் எந்த பாகுபாட்டையும் அனுமதிக்க மாட்டேன் என்றும், தனது அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் முஸ்லிம்கள் பெறலாம் என்றும் கூறினார்.
இதற்கிடையே, கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்திலேயே சுப்ரீம் கோர்ட்டு கூறிய 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று அயோத்தி வழக்கு மனுதாரர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கோரியுள்ளார்.
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அனைத்து பிரிவினருக்கும் திருப்தி ஏற்பட்டு உள்ளதாக உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அயோத்தியில் மசூதி கட்டு வதற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.