காவலாளியே திருடன்; பிரதமருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
காவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17ந்தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தனது தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்பை அவர் வெளியிடுகிறார். அந்தவகையில் வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கின் தீர்ப்பு கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ‘காவலாளியே திருடன்’ என்ற கோஷத்துக்காக ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட மேலும் 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.
இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி ராகுல் காந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மன்னிப்பு கோரி புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாகவும் கடந்த ஏப்ரல் 30ந்தேதி நடைபெற்ற விசாரணையின் போது கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். காவலாளியே திருடன் என்று மோடியை விமர்சிக்கும் வார்த்தையோடு, தவறுதலாக உச்ச நீதிமன்றம், ரபேல் விவகாரத்தில் அளித்த தீர்ப்போடு ஒப்பிட்டு பேசிவிட்டதாகவும், தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிரான பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story