நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்துவோம்: காங்கிரஸ் உறுதி


நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்துவோம்: காங்கிரஸ் உறுதி
x
தினத்தந்தி 23 Nov 2019 9:18 AM GMT (Updated: 23 Nov 2019 9:25 AM GMT)

மராட்டியத்தின் அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு நாள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடுமையாக சாடியுள்ளார்.

மும்பை,

மராட்டிய அரசியலில், திடீர் திருப்பமாக இன்று காலை முதல் மந்திரியாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த அஜித் பவார் பொறுப்பேற்றுக்கொண்டார்.  

இன்று காலை முதல் மராட்டிய அரசியல் களத்தில்,   நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.  சிவசேனா கட்சியின்  தலைவர் உத்தவ் தாக்ரேவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும்  இன்று காலை 11.30 மணியளவில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது, பாஜகவுடன் கைகோர்க்க மாட்டோம், இணைந்தே செயல்படுவோம் என்று கூறினர்.  

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  மராட்டிய வரலாற்றில் இன்று கருப்பு தினமாகும். நாங்கள் மூன்று பேரும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா) ஒன்றாகவே இருக்கிறோம்.  நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.  

காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் எங்களுடன் தான் உள்ளனர். தற்போதைய சூழலை, அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நாங்கள் எதிர்கொள்வோம்.  சரத்பவார் எங்களை சந்தித்து பேசினார், நாங்கள் கூறிய முடிவில் மாறவில்லை. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரசால் எந்த தாமதமும் ஏற்படவில்லை . 

அனைவரும் இணைந்து பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுப்போம் . ஆட்சி அமைப்பதற்கு உண்டான எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க காரணம் என்ன? எல்லாமே மிகவும் ரகசியமாக நடைபெற்றுள்ளது.  பா.ஜ.க. அனைத்து நிலைகளையும் கடந்து விட்டது. ஜனநாயகத்திற்கு இது மிகப் பெரிய அவமானம்” என்றார்.

Next Story