மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து


மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து
x
தினத்தந்தி 23 Nov 2019 10:00 PM GMT (Updated: 23 Nov 2019 9:14 PM GMT)

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் எந்த கட்சியோ, கூட்டணியோ ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதால், கவர்னர் சிபாரிசின் பேரில் கடந்த 12-ந் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த மாநிலத்தில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னதாக அங்கு பாரதீய ஜனதா தலைமையில் புதிய அரசு பதவி ஏற்க இருப்பது பற்றி அதிகாலையில் கவர்னர் பகத்சிங் கோஷியாரியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மராட்டியத்தில் அதிகாலை 5.47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்ததாக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய்குமார் பல்லா வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை அளிப்பதற்கான சிறப்பு அதிகாரம் பிரதமருக்கு உள்ளதாகவும், அதன்படி பிரதமருக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்வதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியதாகவும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story