நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை


நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2019 9:54 PM GMT (Updated: 6 Dec 2019 9:54 PM GMT)

நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்தது. அதோடு புதிய பாஸ்போர்ட் கேட்டு தாக்கல் செய்த அவரது விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

புதுடெல்லி,

திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் நித்யானந்தா பெங்களூரு அருகே உள்ள பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம் நடத்திவருகிறார். மேலும் சில நகரங்களிலும் ஆசிரம கிளைகளை அமைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள இவரது ஆசிரமத்தில் இருந்த 2 சிறுமிகள் காணாமல்போனதாக அவர்களது தந்தை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் 2 சிறுமிகளும் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யானந்தாவை தேடிவந்தனர். ஏற்கனவே கர்நாடக மாநிலத்திலும் நித்யானந்தா மீது ஒரு கற்பழிப்பு வழக்கு உள்ளது. இதற்கிடையே நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் ‘கைலாசம்’ என்ற தனிநாடு அமைக்க அவர் முயற்சிப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்த தகவலை ஈக்குவடார் அரசு மறுத்துள்ளது. சாமியார் நித்யானந்தாவுக்கு நாங்கள் புகலிடம் அளிக்கவில்லை. அவர் இந்தியாவில் கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் தேடப்படுபவர் என்பதை நாங்கள் அறிந்தோம். எனவே அவர் புகலிடம் கேட்டு அணுகியதை எங்கள் நாடு மறுத்துவிட்டது. அவர் இங்கிருந்து வெளியேறி ஹைதி நாட்டுக்கு சென்றுவிட்டார் என்று ஈக்குவடார் தூதரகம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது அனைத்து துறை அலுவலகங்களும் நடத்திய விசாரணையின் மூலமும், கிடைத்த ஆவணங்கள் மூலமும் இந்த நபர் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்படுபவர் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். உள்ளூர் அரசிடமும் (தமிழக அரசிடம்) நித்யானந்தா தொடர்பான தகவல்களை சேகரிக்கும்படி எங்கள் அலுவலகங்களை கேட்டுள்ளோம்.

வெளிநாடுகளில் உள்ள எங்கள் அலுவலகங்கள் மூலமும் நித்யானந்தா பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறோம். நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பாஸ்போர்ட் கேட்டு தாக்கல் செய்த அவரது விண்ணப்பத்தையும் நிராகரித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story