உன்னாவ் இளம்பெண்ணின் உடல் அடக்கத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்


உன்னாவ் இளம்பெண்ணின் உடல் அடக்கத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:00 PM GMT (Updated: 8 Dec 2019 9:07 PM GMT)

கற்பழித்து எரித்துக்கொல்லப்பட்ட உன்னாவ் இளம்பெண்ணின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

உன்னாவ்,

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலர் கடத்திச்சென்று கற்பழித்ததாக, கடந்த மார்ச் மாதம் அந்த பெண் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் மேலும் சிலருடன் சேர்ந்து, கடந்த 5-ந்தேதி அந்த இளம்பெண்ணை தூக்கிச்சென்று உயிருடன் தீ வைத்து எரித்தனர். இதில் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப்போராடிய அந்த பெண் டெல்லி மருத்துவமனையில் 6-ந்தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில பா.ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் நேற்று முன்தினம் உன்னாவில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்ய குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தங்கள் கிராமத்துக்கு நேரில் வந்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தால் மட்டுமே இளம்பெண் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்படும் என அவர்கள் கூறினர்.

உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரி இது தொடர்பாக கூறுகையில், ‘யோகி ஆதித்யநாத்திடம் எனக்கு தனிப்பட்ட முறையில் பேசவேண்டும். எனது சகோதரி அரசு வேலை பெற்று அதில் சேர்வதற்கு தயாராக இருந்தார். ஆனால் அது முடியவில்லை. எனவே எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அத்துடன் குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனையும் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தினரை லக்னோ அழைத்து சென்று முதல்-மந்திரியை சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் தாங்கள் லக்னோ சென்று முதல்-மந்திரியை சந்திக்கமாட்டோம் எனவும், அவரே தங்கள் கிராமத்துக்கு நேரில் வரவேண்டும் எனவும் கூறிய இளம்பெண் குடும்பத்தினர், யோகி ஆதித்யநாத் முன்னிலையில்தான் உடல் அடக்கம் நடக்க வேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்தனர். இதனால் இளம்பெண்ணின் உடல் அடக்க நடவடிக்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே லக்னோ மண்டல கமிஷனர் முகேஷ் மேஷ்ராம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து இளம்பெண்ணின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டது. அதன்படி இளம்பெண்ணின் உடல் அடக்கத்துக்கான பணிகளை குடும்பத்தினர் தொடங்கினர்.

கற்பழித்து எரித்துக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் முகேஷ் மேஷ்ராம் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Next Story