4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: டெல்லியில் 43 பேர் பரிதாப சாவு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்


4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: டெல்லியில் 43 பேர் பரிதாப சாவு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
x
தினத்தந்தி 9 Dec 2019 12:15 AM GMT (Updated: 8 Dec 2019 9:47 PM GMT)

டெல்லியில் தொழிற்சாலைகள் இயங்கி வரும் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனஜ் மண்டி என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது.

அதில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், முறையான அனுமதி பெறாமல், அவை சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழும் பெறவில்லை.

அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் சிலர், அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. அப்போது, தொழிலாளர்கள் பலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

தீயுடன் எழுந்த கரும்புகையால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் தீயில் சிக்கினர். சிலர் மயங்கி விழுந்தனர்.

இதற்கிடையே, காலை 5.20 மணியளவில் தீயணைப்பு படைக்கு தகவல் கிடைத்தது. உடனே சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், குறுகலான சந்து பகுதியில் அந்த கட்டிடம் அமைந்து இருந்ததால், தீயணைப்பு வீரர்களுக்கு மீட்புப்பணி கடினமாக இருந்தது. அவர்கள் சன்னல் கம்பிகளை துண்டித்துத்தான் உள்ளே நுழைய முடிந்தது.

காற்றோட்ட வசதியே இல்லாததால், தொழிலாளர்கள் சிலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர். உள்ளே சிக்கி இருந்த 63 பேரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மயங்கி கிடந்தவர்களை தங்கள் முதுகில் சுமந்து வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால், அந்த இடத்துக்கு பொதுமக்களும், அரசியல் வாதிகளும் திரண்டு வந்ததால், மீட்புப்பணி மிகவும் சிக்கலாகி விட்டது.



 


 சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் கருகி பலியானார்கள். தூக்கத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில், 34 பேர் இறந்தனர். எனவே, சாவு எண்ணிக்கை 43 ஆனது. பலியானவர்களில் 15 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர், டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரி, ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரி, இந்து ராவ் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 2 தீயணைப்பு வீரர்களும் அடங்குவர்.

காயமடைந்தவர்களின் உறவினர்கள், தகவல் அறிந்து திரண்டு வந்தனர். ஆனால், தங்களுக்கு வேண்டியவர்கள் எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியாமல் திண்டாடினர்.

உதாரணமாக, பீகாரை சேர்ந்த மனோஜ் (வயது 23) என்பவர், தன் சகோதரர் நவீன், அந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கைப்பை தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும், நவீன் காயமடைந்ததாக தகவல் கேள்விப்பட்டு வந்தபோது, அவர் எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

இதுபோல், ஒரு முதியவர், தன்னுடைய 3 மருமகன்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் கண் கலங்கினார்.

மத்திய மந்திரிகள் ஹர்தீப்சிங் பூரி, அனுராக் தாக்குர், பா.ஜனதா எம்.பி.க்கள் மனோஜ் திவாரி, விஜய் கோயல், டெல்லி மந்திரிகள் சத்யேந்திர ஜெயின், இம்ரான் உசைன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டனர்.

தீவிபத்தை தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் உடனடியாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது



 


அந்த இடத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 304-வது பிரிவின்கீழ் (எதிர்பாராமல் நடந்த கொலை) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.

இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “இந்த விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

பிரதமர் மோடி, தனது இரங்கல் செய்தியில், “இந்த தீவிபத்து மிகவும் கொடூரமானது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பலியானோரை பற்றியே எனது நினைவு எப்போதும் இருக்கும். தேவையான உதவிகளை அதிகாரிகள் அளித்து வருகிறார்கள்” என்று கூறி உள்ளார்.

மேலும், பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். அத்துடன், மீட்புப்பணியில் காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்று கூறி உள்ளார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், கிழக்கு டெல்லி பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர், டெல்லி எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story