டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு - நேற்றும் தீ பிடித்ததால் பரபரப்பு


டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு - நேற்றும் தீ பிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:00 PM GMT (Updated: 9 Dec 2019 9:51 PM GMT)

டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் நேற்று மீண்டும் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் ஜான்சி ராணி சாலையில் உள்ள அனஜ் மண்டி பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்த இந்த தொழிற்சாலைகளில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அந்த கட்டிடத்திலேயே தங்கியிருந்தனர்.

இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதால் கட்டிடம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. அதிகாலையில் தூக்கத்தில் இருந்த தொழிலாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த கொடூர விபத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் 43 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

தீ விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் ரேஹான் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தீ விபத்து நடந்த கட்டிடத்தில் டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று அவர்கள் மொத்த கட்டிடத்தையும் 3டி ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, விபத்துக்கான ஆதாரங்களை சேகரித்தனர்.

இதைப்போல தடயவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டிடத்தை பார்வையிட்டு மாதிரிகளை சேகரித்தது.

இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட அந்த 4 மாடி கட்டிடத்தில் நேற்று காலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஒரு பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்களில் தீ பிடித்ததால் இந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 2 வண்டிகளில் விரைந்து வந்து 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் மவுலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. பீகாரை சேர்ந்த தொழிலாளர்களின் உடல்களை ரெயில் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் அரசு கூறியிருந்தது. ஆனால் அது பற்றிய தெளிவான தகவல்கள் தெரியாததால் உறவினர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

அதேநேரம் அனைத்து தொழிலாளர்களின் உடலையும் சொந்த ஊர் கொண்டு செல்ல தனித்தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படும் என டெல்லி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story