தேசிய செய்திகள்

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + According to the 2011 census, local elections can be held - DMK Supreme Court order in the ongoing case

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி தேர்தலை நடத்த உத்தரவிட்டு இருக்கிறது.
புதுடெல்லி,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த 2-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வார்டு மறுவரையறை, சுழற்சிமுறை இடஒதுக்கீடு பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் சிலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.


இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும், மேற்கண்ட 9 மாவட்டங்களில் புதிதாக வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவடைந்த பிறகு அந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனால் மேற்கண்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக மீதமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்த தடை இல்லை என்றும், 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதைத்தொடர்ந்து 9 மாவட்டங்கள் நீங்கலாக, மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த மாநில தேர்தல் ஆணையம், அதற்கான புதிய தேர்தல் அட்டவணையை கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

இதற்கிடையே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் காங்கிரஸ், ம.தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும், கரூர் வாக்காளர் முருகேசன் என்பவர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரையறை, மறுசுழற்சி இடஒதுக்கீடு முறையாக செய்யப்படவில்லை. 1991-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2016-ம் ஆண்டில் இடஒதுக்கீடு தொடர்பான மறுசுழற்சி முறையை தயார் செய்து அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்று அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை கடுமையாக பாதிக்கும். எனவே, தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தி 2019-ம் ஆண்டு வரையிலான இடஒதுக்கீடு தொடர்பான மறுசுழற்சி முறையை அமல்படுத்தி புதிதாக அறிவிப்பாணை வெளியிடவேண்டும். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததால், கடந்த 7-ந் தேதி வெளியிட்ட தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். காங்கிரஸ் தரப்பில் மூத்த வக்கீல் ப.சிதம்பரம் ஆஜரானார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ்.வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் வினோத் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று தி.மு.க. கூறுகிறது என்றும், அவர்கள் விரக்தியில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

இதற்கு தி.மு.க. வக்கீல்கள் பதில் அளித்து வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த விஷயத்தில் பெரும் தந்திரம் பொதிந்துள்ளது. உள்ளே இருப்பது கடவுளா அல்லது பூதமா என்பது தேவையான விவரங்களை விளக்கினால் தெரிந்துவிடும். தங்கள் பதில் மனுவில் தமிழக அரசு குழம்பி உள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் மறுசுழற்சி முறையை 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கிராம ஊராட்சி தேர்தலுக்கு வார்டுகளில் மட்டுமே இடஒதுக்கீடு கணக்கிடப்பட்டு உள்ளது. நிர்வாகிகளின் பதவி தொடர்பாக இட ஒதுக்கீடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

பட்டியல் இனத்தவர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடைபெறவில்லை.

9 மாவட்டங்களுக்கும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீட்டை 4 மாதங்களுக்குள் முடித்து தேர்தலை அறிவிக்க 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு மறுநாள் அவசர அவசரமாக இடஒதுக்கீடு ஆணையை அரசு வெளியிடுகிறது.

அதேபோல் தற்போது வார்டுகள் மறுவரையறை செய்வதில் பல குளறுபடிகள் நடைபெற்று உள்ளன. தேர்தல் ஆணையம் கடந்த 16.9.2016 அன்று வெளியிட்ட அறிவிப்பாணையில் 1991-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு மறு ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு மறுசுழற்சி செய்யப்பட்டதாக அறிவித்து உள்ளது. வார்டுகளில் மட்டுமே இடஒதுக்கீடு மற்றும் மறு சுழற்சி முறை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நிர்வாகிகளின் பதவி தொடர்பாக இடஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு தி.மு.க. தரப்பில் வாதிடப்பட்டது.

அபிஷேக் சிங்வி தனது வாதத்தின்போது, 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறியதோடு, அதற்கு திருவள்ளூர் மாவட்டத்தை உதாரணமாக சுட்டிக்காட்டினார். அத்துடன் மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான் என்றும் கூறினார்.

அப்போது, திருவள்ளூர் மாவட்டம் என்பதை “திருவள்ளார்” என்று மீண்டும் மீண்டும் உச்சரித்தார். உடனே தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குறுக்கிட்டு, அது “திருவள்ளார்” அல்ல, திருவள்ளூர் என்று திருத்தினார்.

காங்கிரஸ் தரப்பில் ஆஜரான ப.சிதம்பரம் வாதாடுகையில், 9 மாவட்டங்களுக்கும் வார்டு மறுவரையறை செய்து முடித்தால்தான் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டில் தெளிவாக முடிவெடுக்க முடியும் என்றார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில், 9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறையை முடித்தால் இடஒதுக்கீட்டில் மாற்றம் வராது என்று வாதிடப்பட்டது. மேலும் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதற்கான ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு தி.மு.க. தரப்பு வக்கீல் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இத்தனை நாட்களாக இல்லாமல் தற்போது இந்த ஆவணம் அரசால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினர்.

உடனே தமிழக அரசின் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, இதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டதோடு, மனுதாரர் தரப்பில் அனைத்தும் தவறாக கூறப்படுகிறது என்றும், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில், கடந்த 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்கு பதிலாக 3 மாதங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகளை முடித்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தற்போது நடைபெறும் தேர்தலை 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும்.