வடகிழக்கு மாநிலங்கள் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என இந்திய ராணுவம் அறிவுறுத்தல்


வடகிழக்கு மாநிலங்கள் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என இந்திய ராணுவம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2019 4:36 AM GMT (Updated: 14 Dec 2019 4:36 AM GMT)

வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது

புதுடெல்லி,

இந்திய குடியுரிமை சட்டதிருத்த மசோத மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய ராணுவம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் இந்திய ராணுவம் குறித்து பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவிடப்பட்டுள்ளது.

Next Story