வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு
x
தினத்தந்தி 27 Dec 2019 10:00 PM GMT (Updated: 27 Dec 2019 9:12 PM GMT)

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது. இதனால் வெங்காயம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

புதுடெல்லி,

விளைச்சல் பாதிப்பு காரணமாக, வெங்காயம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. கிலோ ரூ.200 வரை சென்றது. வெங்காயம் வரத்து அதிகரித்ததால், அதன் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இருப்பினும், அருணாசலபிரதேச தலைநகர் இடாநகரில் இன்னும் ரூ.150 வரை வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் ரூ.120 ஆகவும், டெல்லியில் ரூ.102 ஆகவும், சென்னையில் ரூ.80 ஆகவும் விலை நிலவரம் உள்ளது.

வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொறுப்பை எம்.எம்.டி.சி. என்ற தனது நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது. அந்த நிறுவனம், துருக்கி, எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 1,160 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.

அந்த வெங்காயம் தற்போது மும்பை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வெங்காயம் உள்ளது.

மேலும், 10 ஆயிரத்து 560 டன் வெங்காயம் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் இந்தியா வந்தடையும் என்றும் அதிகாரி கூறினார். இதுவரை மொத்தம் 49 ஆயிரத்து 500 டன் வெங்காய இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதமும் கப்பலில் வெங்காயம் வந்து சேரும் என்று அதிகாரி கூறினார்.

வெங்காயம் வரத்து அதிகரிப்பால், அதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story