வீர சாவர்க்கர் பற்றி சர்ச்சை கருத்து: காங்கிரசின் புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு


வீர சாவர்க்கர் பற்றி சர்ச்சை கருத்து: காங்கிரசின் புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 1:03 AM GMT (Updated: 4 Jan 2020 1:03 AM GMT)

வீர சாவர்க்கர் பற்றி காங்கிரசின் சேவா தள பிரிவு வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றி காங்கிரஸ் கட்சியின் சேவா தள பிரிவு மத்திய பிரதேசத்தில் நடந்த முகாமில் ‘வீர சாவர்க்கர், கித்னே வீர்?' என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளது. அந்த புத்தகத்தில் வீர சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து வெளியே வந்த போது, ஆங்கிலேயே அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றதாகவும், வீர சாவர்க்கரும், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயும் உடல் ரீதியாக தவறான உறவு வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ள இந்த புத்தகத்துக்கு மராட்டியத்தில் காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “வீர சாவர்க்கர் ஒரு சிறந்த மனிதர். அவர் தொடர்ந்து சிறந்த மனிதராகவே இருப்பார். ஒரு பிரிவு அவருக்கு எதிராக தொடர்ந்து பேசி கொண்டு இருக்கிறது. இது அவர்களின் மனதில் உள்ள அழுக்கை காட்டுகிறது” என்றார்.

சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘ரேப் இன் இந்தியா' பேச்சுக்கு மன்னிப்பு கேட்க தனது பெயர் ‘ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி’ என்று டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. வீர சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் அந்த பேச்சை சிவசேனா கண்டித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வீர சாவர்க்கரை இழிவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் வெளியிட்ட புத்தகத்துக்கு மராட்டியத்தில் தடை விதிக்க வேண்டும் என பாரதீய ஜனதாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தி உள்ளார்.


Next Story