பன்னாட்டு தூதர்களை சந்தித்த விவகாரம் ; நிர்வாகிகள் 2 பேருக்கு காங்.விளக்கம் கேட்டு நோட்டீஸ்


பன்னாட்டு தூதர்களை சந்தித்த விவகாரம் ; நிர்வாகிகள் 2 பேருக்கு காங்.விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2020 5:57 AM GMT (Updated: 10 Jan 2020 5:57 AM GMT)

பன்னாட்டு தூதர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரண்டு பேருக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்ரீநகர்,

ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து நேரில் அறிய விரும்புவதாக பல்வேறு நாடுகளின் தூதர்கள் மத்திய  அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை காஷ்மீருக்கு அழைத்து செல்ல மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ.ஜஸ்டர் உள்பட 15 நாடுகளின் தூதர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் அழைத்து செல்லப்பட்டனர். இந்த குழுவில் வங்காளதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவுகள், தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் இடம்பெற்றனர். காஷ்மீரில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கினர். பின்னர் இந்த குழுவினர் காஷ்மீரை சேர்ந்த உள்ளூர் அரசியல் தலைவர்கள், உள்ளூர் ஊடக பிரதிநிதிகள் குழுக்களையும் சந்தித்து பேசினர்.

ஜம்மு காஷ்மீர் வந்த பன்னாட்டு தூதர்களை, காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் இரண்டு பேரும் சந்தித்தனர். இந்த நிலையில்,  அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Next Story