எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
மும்பை,
நாக்பூரில் உள்ள கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 100-வது அகில இந்திய ஓரியண்டல் மாநாடு நடந்தது.இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நடந்த வன்முறைகளை சுட்டிக் காட்டி கவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஒரு தேசத்தின் மக்களாக நாம் எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு நேர்மறை அணுகுமுறையுடன் முன்னேற்றத்தை நோக்கி நாடு நகர்வதை தான் பார்க்க வேண்டும். இது அனைவரின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இது உங்களது சொந்த நாடு. பஸ்சை எரிப்பது, ரெயிலை எரிப்பது, வாகனங்களை எரிப்பது என்ற உங்களது சிந்தனையை எரிக்க வேண்டும்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறையால் எந்த தீர்வையும் கொண்டு வர முடியாது. அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. முன்னேற்றத்திற்கு அமைதி மிகவும் தேவைப்படுகிறது. நமக்கு பதற்றம் இருந்தால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அமைதியான வாழ்க்கை, அமைதியான நாடு மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மனிதகுலம் மகிழ்ச்சியுடன் செழிப்பாக வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story