நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Jan 2020 10:00 PM GMT (Updated: 22 Jan 2020 10:00 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்ஸ் உள்ளிட்ட கட்டிடங்களை முழுமையாக அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் 49 சொகுசு விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த 49 விடுதிகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. ‘சீல்’ வைத்தது தொடர்பான உத்தரவில் திருத்தம் கோரி விடுதி உரிமையாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர்.

மேலும், விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் இருக்கும் இடம் குறித்தும், யானைகள் வழித்தடத்தில் அவை வருகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் 2 வனத்துறை நிபுணர்களும் இடம் பெறும் வகையில் குழு அமைக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்து முடிவு செய்யும் வகையில் இந்த வழக்கை இன்றைக்கு(வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர்.


Next Story