விரைவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


விரைவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 10:25 PM GMT (Updated: 2 Feb 2020 6:34 AM GMT)

விரைவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நலிவடைந்த பிரிவினருக்கு இணையதள கல்வி முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கல்வித்துறை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டு கூறியதாவது:-

2030-ம் ஆண்டுவாக்கில், உலகின் மிகப்பெரிய உழைக்கும் வயது மக்கள்தொகையை கொண்ட நாடாக இந்தியா மாறும்.

அவர்களுக்கு கல்வி மட்டுமல்ல, வேலை வாய்ப்பும், வாழ்க்கைத்திறன்களும் தேவைப்படுகின்றன. கல்வி கொள்கை தொடர்பாக மாநில கல்வி அமைச்சகங்களுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், சம்மந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன.

விரைவில் புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும்.

திறமையான ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது, கல்வியில் புதுமைகளை புகுத்துவது, சிறப்பான ஆய்வகங்களை உருவாக்குவது ஆகியவற்றை செய்வதற்கு பெரிய அளவில் நிதி தேவை என்று உணரப்படுகிறது. இதற்கு வெளிப்புற கடன்கள், நேரடி அன்னிய முதலீட்டை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுக்கல்வி திட்டத்தின்கீழ் உள்ள மாணவர்கள் (தொழிற்கல்வி படிப்போரும் அடங்குவர்), வேலை வாய்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும். இதற்காக 2021 மார்ச் மாதத்துக்குள், 150 உயர் கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பயிற்சியுடன் இணைந்த பட்டம், டிப்ளமோ படிப்புகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கும், உயர்கல்வியை பெற வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு பட்ட அளவிலான ஆன்லைன் (இணையதளம் வாயிலாக) கல்வி திட்டத்தை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதை ஆரம்பத்தில் தேசிய தர வரிசை கூட்டமைப்பில் இணைந்த 100 நிறுவனங்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உயர் கல்வி படிப்பதற்கான நாடாக மாற்றப்பட வேண்டும். இந்தியாவில் படியுங்கள் திட்டத்தின்கீழ், ‘இந்த் சாட்’ கல்வி ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் நடத்தப்படும்.

தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் ஒன்றும், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த டாக்டர்கள், பொது மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்கிற வகையில், தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் ஒரு மருத்துவ கல்லூரியை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துணை இணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

போதுமான வசதிகளை கொண்ட பெரிய ஆஸ்பத்திரிகள், தேசிய தேர்வுகள் வாரியத்தின்கீழ் டி.என்.பி. மற்றும் எப்.என்.பி. படிப்புகளை நடத்த ஊக்குவிக்கப்படும்.

2020-021-ம் ஆண்டில், கல்விக்கு ரூ.99 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் திறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Next Story