‘கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்’ - பிரான்ஸ் விருப்பம்
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் கால் பதித்து பரவி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உலகளாவிய உயிர்ப்பலி நேற்றைய நிலவரப்படி 3 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்து விட்டது.
கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவர தடுப்பூசிதான் முக்கிய பங்கு வகிக்கும் என்று விஞ்ஞானிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி அல்லது மருந்துகளை தன்னார்வ காப்புரிமையின் கீழ் பெருமளவு தயாரித்து, எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதை ஏராளமான நாடுகள் மற்றும் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
இந்த நேரத்தில் டெல்லியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இம்மானுவேல் லெனைன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகமெங்கும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவதில் போட்டி போடுகின்றனர். இந்த தடுப்பூசியை அல்லது மருந்தை தயாரித்து உலகளவில் சமமாக வினியோகிக்கப்பட வேண்டும் என்றால், அதில் நாடுகளை ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பெருமளவில் தயாரிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
உலகளவில் தடுப்பூசிகளை, பொதுவான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கொரோனா வைரசுக்கு ஒரு தடுப்பூசியை கண்டுபிடிக்க இந்தியாவில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தனித்தனியே திட்டங்களை வைத்துக் கொண்டு செயல்படுகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய 2 நாள் மாநாட்டில் இந்த பிரச்சினை முக்கிய பிரச்சினையாக எழுந்தது. அங்கு பல நாடுகள் தடுப்பூசியை தயாரிக்கவும், அனைத்து நாடுகளுக்கு கிடைக்கச் செய்யவும் அழுத்தம் கொடுத்தன.
கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்ப்பதற்கான அனைத்து தயாரிப்புகளும் உலகளவில், சரியான நேரத்தில், சமமான அளவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற ஐரோப்பிய கூட்டமைப்பின் தீர்மானத்தை இந்தியாவும் பிரான்சும் ஆதரித்தன. மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான விரிவான நோய்த்தடுப்பு மருந்தை (தடுப்பூசியை) உலகளாவிய பொது நன்மையாக அடிக்கோடிட்டு காட்டின.
கொரோனா வைரஸ் தொற்று வெடித்ததில் இருந்து, இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் ஒருங்கிணைந்த உலகளாவிய அணுகுமுறையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்தியா ஏற்கனவே 44 கோடியே 60 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளையும், 154 கோடி பாரசிட்டமால் மாத்திரைகளையும் 133 நாடுகளுக்கு வழங்கி உலகத்தலைவர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிறிங்கலா, கொரோனா வைரஸ் தொற்றுநோய், உலகின் மருந்தகமாக இந்தியாவின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டார்.
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற உலகின் எதிர்காலத்தை கட்டமைக்கும் முக்கிய பிரச்சினைகளை தனிமைப்படுத்தப்பட்ட முறையில் தீர்த்து விட முடியாது.
இந்தியாவும், பிரான்சும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் சீர்திருத்தத்துக்கு பிரான்ஸ் ஊக்குவிக்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி தருகிறது.
நாம் இன்னும் பலவற்றை செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story