கொதிகலன் வெடித்து 13 பேர் பலி: என்.எல்.சி. நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கொதிகலன் வெடித்து 13 பேர் பலியான சம்பவத்தில், என்.எல்.சி. நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் கடந்த 1-ந் தேதி கொதிகலன் வெடித்து தீப்பிடித்தது. இதில், 13 தொழிலாளர்கள் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சம்பவத்தின் உண்மைத்தன்மையை சுதந்திரமாக சரிபார்ப்பது அவசியம். இந்த வழக்கில் இறுதி மதிப்பீடு வெளிவராத நிலையில், என்.எல்.சி. நிறுவனம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும்.
பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். இதற்காக கடலூர் மாவட்ட கலெக்டரிடம் 2 வாரங்களுக்குள் ரூ.5 கோடியை என்.எல்.சி. நிர்வாகம் டெபாசிட் செய்ய வேண்டும். அதைக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் இழப்பீட்டை செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரிக்க சுயேச்சை யான குழு ஒன்றையும் பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.
Related Tags :
Next Story