எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லையா? மத்திய மந்திரி கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்
இந்திய-சீன எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி கூறியதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
சீனாவின் அத்துமீறல் முயற்சி காரணமாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீன ராணுவத்தின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு தனது படைகளை நிறுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய், இந்திய-சீன எல்லையில் கடந்த 6 மாதங்களாக எந்த ஊடுருவலும் இல்லை என்று கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எல்லையை யாரும் தாண்டவில்லை என்று பிரதமர் கூறுகிறார். அப்புறம் சீன வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்குகிறார்கள். அதன்பிறகு, சீன நமது நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக ராணுவ மந்திரி கூறுகிறார். இப்போது உள்துறை ராஜாங்க மந்திரி, எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்கிறார். மோடி அரசு இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இருக்கிறதா? அல்லது சீன ராணுவத்துக்கு ஆதரவாக இருக்கிறதா? மோடி ஏன் மிகவும் அஞ்சுகிறார்?” என்று கூறி உள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என்று கூறி இருப்பதன் மூலம் சீனாவின் நடவடிக்கையை மத்திய அரசு ஆதரிப்பது போல் உள்ளது என்றும், பொய்யான தகவலை தெரிவிப்பது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.
இந்தியாவின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க பாடுபடும் ராணுவத்தின் பெருமையை நீர்த்துப்போகச் செய்வது போல் மத்திய அரசின் கருத்து உள்ளது என்றும், லடாக் எல்லை நிலவரம் குறித்த உண்மையான தகவலை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Related Tags :
Next Story