மெய்நிகர் முறையில் மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை


மெய்நிகர் முறையில் மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 18 Oct 2020 11:40 PM GMT (Updated: 2020-10-19T05:10:16+05:30)

மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையை 10 பந்தல்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையை 10 பந்தல்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நவராத்திரியையொட்டி மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் துர்கா பூஜைக்கு பல்வேறு தரப்பினரும் ஏற்பாடுகளை தொடங்கி வருகின்றனர். வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜைக்காக மாநிலமே வெகு விமரிசையாக தயாராகி வருகிறது.

இந்த ஆண்டு முதல் முறையாக பா.ஜனதாவின் மகளிர் அணி சார்பில் சால்ட் லேக் பகுதியில் உள்ள கிழக்கு மண்டல கலாசார மையத்தில் சிறப்பு விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியின் மனைவியும், புகழ்பெற்ற ஒடிசி கலைஞருமான டோனா மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்வுகள் தொடக்க விழாவில் நடக்கிறது.

இந்த கொண்டாட்டங்களில் முக்கிய அம்சமாக, பிரதமர் மோடியும் மெய்நிகர் முறையில் உரையாற்றுகிறார். துர்கா பூஜையின் முதல் நாளான மகா சாஸ்தி அன்று பிரதமர் நிகழ்த்தும் உரை, இந்த ஆண்டு கொண்டாட்டத்துக்கு முத்தாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் உரை கிழக்கு மண்டல கலாசார மையம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் 10 பூஜை பந்தல்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த பந்தல்கள் பின்னர் முடிவு செய்யப்படும் என மாநில பா.ஜனதா துணைத்தலைவர் பர்தாப் பானர்ஜி கூறினார். இதைப்போல மோடியின் உரையை மாநிலத்தின் பல பகுதிகளில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பவும் மாநில பா.ஜனதா நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரசும் முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக துர்கா பூஜை கொண்டாட்டங்களின் வாயிலாக தங்கள் இருப்பை மாநிலத்தில் பலப்படுத்த இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜனதாவைப்போல ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் துர்கா பூஜை நிகழ்வுகளை ஆடம்பரமாக ஒருங்கிணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story