பாரிஸ் ஒப்பந்தத்த்தின் இலக்குகளை விட இந்தியா சிறப்பாக செயலாற்றி வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்


பாரிஸ் ஒப்பந்தத்த்தின் இலக்குகளை விட இந்தியா சிறப்பாக செயலாற்றி வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 22 Nov 2020 4:18 PM GMT (Updated: 22 Nov 2020 4:20 PM GMT)

பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை பின்பற்றுவதோடு, அதை விட சிறப்பாக இந்தியா செயலாற்றி வருவதாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அகிஸ் தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் 15-வது ஜி-20 மாநாடு காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். 

நேற்றையை கூட்டத்தின் போது, “21 ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்துகொள்வது” என்ற தலைப்பில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2வது நாளாக நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், 2030 ஆம் ஆண்டளவில் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதை இந்திய அரசு தனது லட்சியமாக கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயை எதிர்த்து உலகம் போராடி வரும் நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த வழியில் போராடுவதும் மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் எல்.ஈ.டி (LED) விளக்குகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், சுமார் 80 மில்லியன் குடும்பங்களில் புகை இல்லாத சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். பாரம்பரிய முறைகளால் ஈர்க்கப்பட்டு குறைந்த கார்பன் வெளியீட்டு முறைகளை இந்தியா பின்பற்றி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி,  பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாது, அதை விட சிறப்பாக இந்தியா செயலாற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்று மனிதகுல வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

Next Story