டெல்லியில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் 10 கட்டிடங்கள் - மத்திய அரசு தகவல்


டெல்லியில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் 10 கட்டிடங்கள் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 19 Dec 2020 6:26 AM IST (Updated: 19 Dec 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் 10 கட்டிடங்கள் இடம்பெறும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. பகுதியில்தான் நாடாளுமன்றம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் இல்லங்கள், அலுவலகங்கள் என ஆட்சி பீடத்தில் இருப்போரின் தங்கும் இடங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் பல்வேறு மாறுதல்களை மேற்கொள்ள மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் புதிய நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் மற்றும் துணை ஜனாதிபதி இல்லங்களை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த பணிகளும் அடங்கிய மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தை மத்திய பொதுப்பணிகள் துறை செயல்படுத்துகிறது.

இதில் நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் இல்லம் மற்றும் துணை ஜனாதிபதி இல்லங்களை புதிதாக அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கு அரசு தயாராகி வருகிறது.

இதில் புதிய பிரதமர் இல்ல வளாகத்தில் 10 கட்டிடங்கள் அதிகபட்சமாக 12 மீட்டர் உயரத்தில் அமைக்க மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளது. இந்த கட்டிடங்கள் ஒவ்வொன்றும் 4 மாடிகளாக அமைக்கப்படுகின்றன.

15 ஏக்கரில் அமைக்கப்படும் இந்த இல்லத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவாக 30,351 ச.மீ. நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதைப்போல பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும் 2½ ஏக்கரில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துணை ஜனாதிபதி இல்லமும் புதிதாக அமைக்கப்படுகிறது. 15 ஏக்கரில் அமையும் இந்த வளாகத்தில் 15 மீட்டர் உயரத்தில் 5 மாடி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இவ்வாறு 32 கட்டிடங்கள் அங்கே அமைகின்றன.

இதற்கிடையே மத்திய விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் செலவினத்தொகையை ரூ.11,794 கோடியில் இருந்து ரூ.13,450 கோடியாக மாற்றியமைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிபுணர் குழு முன் மத்திய பொதுப்பணித்துறை சமர்ப்பித்து இருக்கிறது. 

ஆனால் இந்த திட்டத்தில் பிரதமர் அலுவலகம் அமைக்கும் திட்டத்தை குறிப்பிடவில்லை. ஆனால் பிரதமர் அலுவலகம் அமைக்கும் திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

Next Story