கா‌‌ஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; நாசவேலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்


கா‌‌ஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; நாசவேலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 31 Dec 2020 1:21 AM GMT (Updated: 31 Dec 2020 1:21 AM GMT)

கா‌‌ஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-கா‌‌ஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்த கூட்டுப்படை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான உம்பராபாத் லாயாபோரா பகுதியில் ஸ்ரீநகர்- பாராமுல்லா தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை பாதுகாப்பு படையினர் மற்றும் கா‌‌ஷ்மீரின் சிறப்பு போலீஸ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு சென்று குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீநகர் நோக்கி வந்த வாகனங்கள் மத்திய கா‌‌ஷ்மீர் வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில், வீட்டுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சரணடையும்படி பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். ஆனால் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரவானதால் இருள் மற்றும் கடுங்குளிர் காரணமாக நிறுத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை பின்னர் நேற்று காலை மீண்டும் தொடங்கப்பட்டது. அதுவரையிலும் பயங்கரவாதிகள் இருளில் மறைந்து தப்பி சென்று விடாமல் இருப்பதற்காக அந்த வீட்டை சுற்றிலும் மின்விளக்குகள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில், காலை மீண்டும் பாதுகாப்பு படையினருடன் பயங்கரவாதிகள் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்கள் ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் பெரியளவில் தாக்குதல் நடத்தி திட்டமிட்டு இருந்தது தெரியவந்து இருப்பதாக ராணுவ மேஜர் எச்.எஸ்.சாஹி தெரிவித்தார். ஸ்ரீநகரில் இந்த ஆண்டில் இதுவரை 10 முறை பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கா‌‌ஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதான பாகிஸ்தான் பயங்கரவாதிகளன் கூட்டாளகள் 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பூஞ்ச் மாவட்டத்தின் தாபி கிராமத்தில் உள்ள புதர் பகுதியில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2 துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள் மற்றும் 2 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

கா‌‌ஷ்மீரில் பயங்கரவாதிகள் வழிபாட்டு தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் மூலம் அந்த முயற்சி போலீஸ் மற்றும் ராணுவத்தால் முறியடிக்கப்பட்டு உள்ளதாகவும் பூஞ்ச் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ரமே‌‌ஷ் குமார் அங்ரால் தெரிவித்தார்.


Next Story