புதுவையை பா.ஜ.க. கைப்பற்றினால் தமிழகத்துக்கு பாதிப்பு; தொல்.திருமாவளவன் எம்.பி. பிரசாரம்


புதுவையை பா.ஜ.க. கைப்பற்றினால் தமிழகத்துக்கு பாதிப்பு; தொல்.திருமாவளவன் எம்.பி. பிரசாரம்
x
தினத்தந்தி 5 April 2021 5:44 AM IST (Updated: 5 April 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவையை பா.ஜ.க. கைப்பற்றினால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

தீவிர வாக்குசேகரிப்பு

உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேவபொழிலன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று தொகுதி முழுவதும் திறந்த வாகனத்தில் வீதிவீதியாக சென்று அந்த கட்சியின் அமைப்பாளர் தொல்.திருமாவளவன் எம்.பி. வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

புதுவை சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. அதற்கு உங்கள் ஆதரவு தேவை. அதற்காக 2-வது முறையாக வாக்குகள் கேட்டு வந்துள்ளேன். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக காரணம் இல்லாமல் புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ் உடந்தை

எம்.எல்.ஏ.க்களை விலைபேசி, ராஜினாமா செய்ய வைத்து அரசை பா.ஜ.க. கவிழ்த்தது. இந்த ஜனநாயக விரோத செயல்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் உடந்தையாக இருந்து ஆதரவு அளித்துள்ளது.

புதுச்சேரியை கைப்பற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். கடந்த முறை தமிழக அரசை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் புதுவை அரசை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் கவர்னரை வைத்து திட்டங்களை செய்யவிடாமல் தடுத்தனர். அதற்கு என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் துணைபோயின.

இடஒதுக்கீடு இருக்காது

புதுவையை பா.ஜ.க. கைப்பற்றினால் தமிழகத்துக்கும் பாதிப்பு வரும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமை பாதிக்கப்படும். அமைதி கெடும், சமூக நல்லிணக்கம் இருக்காது. இடஒதுக்கீடு இருக்காது.

எனவே புதுவையில் எந்த காரணத்தை கொண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய விட்டுவிடக்கூடாது. காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து ஆட்சியை பிடிக்க வேண்டும். புதுவையை காக்க பா.ஜ.க.வை காலூன்ற விடக்கூடாது. பாசிச சக்திகளை இங்கு வேரூன்ற விடக்கூடாது.

அதனை எவ்வாறேனும் தடுக்கவேண்டும். நம்மால் எதிரணிபோல் செலவிடமுடியாது. ஓட்டுக்கு காசு கொடுக்க முடியாது. அவர்கள் ஊழல் செய்து பணத்தை குவித்து வைத்துள்ளனர். அவை யார் வீட்டு பணம் என்பதை சிந்தித்துப் பார்த்து காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story