சத்தீஷ்காரில் மாயமான கமாண்டோ வீரரை தேடும் பணி தீவிரம்; நக்சலைட்டுகள் உடனான மோதலில் ஈடுபட்டவர்


சத்தீஷ்காரில் மாயமான கமாண்டோ வீரரை தேடும் பணி தீவிரம்; நக்சலைட்டுகள் உடனான மோதலில் ஈடுபட்டவர்
x
தினத்தந்தி 6 April 2021 8:12 PM GMT (Updated: 6 April 2021 8:12 PM GMT)

சத்தீஷ்கார் மாநிலம் தெற்கு பஸ்தார் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் 24 பேர் பலியாகினர்.

நக்சலைட்டுகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப். கோப்ரா கமாண்டோ பிரிவு வீரர் ராகேஷ்வர்சிங் மன்ஹாசை காணவில்லை.இந்நிலையில், சுக்மா பகுதியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், தனக்கு மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், குறிப்பிட்ட கமாண்டோ வீரர் தங்கள் பிடியில்தான் உள்ளதாகவும், ஆனால் அவரை துன்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்ததாகவும் நேற்று முன்தினம் கூறினார்.

அதுகுறித்து பஸ்தார் பகுதி போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறுகையில், ‘காணாமல்போன வீரர் பற்றி நக்சலைட்டுகளிடம் இருந்து எந்த அறிக்கையோ அல்லது புகைப்படமோ வெளியிடப்படாத நிலையில், அந்த வீரர் அவர்கள் பிடியில்தான் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அனைத்து வழிகளிலும் அவரைத் தேடும் முயற்சியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’ என்றார். மாயமான வீரர் பற்றி தகவல் எதுவும் தெரியுமா என்று உள்ளூர் கிராமத்தினரையும் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

குறிப்பிட்ட வனப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் முழுமையாக சுற்றி வளைத்துள்ளதால், அந்த வீரர் நக்சலைட்டுகள் பிடியில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மற்றொரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Next Story