கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தை குறைக்க வேண்டும்; வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை


கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தை குறைக்க வேண்டும்; வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 15 April 2021 4:22 PM GMT (Updated: 15 April 2021 4:22 PM GMT)

வங்கி ஊழியர்கள் கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசுக்கு கடிதம்

மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை செயலாளர் தேபசிஷ் பாண்டாவுக்கு அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டி இருப்பதால், அவை கொரோனா பரப்பும் மையங்களாக திகழ்கின்றன. வங்கி ஊழியர்கள், கொரோனாவின் பிடியில் சிக்குகிறார்கள்.

இதை கருத்திற்கொண்டு, கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் வங்கிகளின் பணி நேரத்தை குறைக்க வேண்டும். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டும் இயங்கச் செய்ய வேண்டும். அதுபோல், வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வங்கிகள் இயங்கச் செய்ய வேண்டும். அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு இதை அமல்படுத்தலாம்.

வீட்டில் இருந்து பணி

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கிளைகள் கொண்ட நகரங்களில் எல்லா கிளைகளையும் திறக்காமல், ஏதேனும் ஒரு கிளையை மட்டும் திறக்க அனுமதிக்கலாம்.

சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டும் நேரில் வந்தும், மற்றவர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

ரூ.50 லட்சம் இழப்பீடு

வங்கி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருதி, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய வங்கி ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுபோல், கொரோனாவால் இறந்த வங்கி ஊழியர்களின் குடும்பத்துக்கும் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story