இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு


இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 16 April 2021 1:25 AM GMT (Updated: 16 April 2021 1:25 AM GMT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த நபர் கடந்த 11-ம் தேதி இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துள்ளார்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி வழக்கம்போல இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒருநபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து, எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதலும் நடத்தாமல் அந்த நபரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஹுஹிம் கிராமத்தை சேர்ந்த குலாம் காதர் என்பது தெரியவந்தது.

மேலும், அந்த நபர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய படையினர் அவரை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த குலாம் காதரை பாதுகாப்பு படையினர் நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பூஞ்ச்-ராவல்கோட் பகுதியில் உள்ள இருநாட்டு எல்லையில் வைத்து குலாம் காதரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம்
ஒப்படைத்தனர்.  

Next Story