கொரோனா பாதிப்பு உயர்வு; பிரதமர் மோடி முன்னணி டாக்டர்களுடன் ஆலோசனை


கொரோனா பாதிப்பு உயர்வு; பிரதமர் மோடி முன்னணி டாக்டர்களுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 19 April 2021 9:44 AM GMT (Updated: 19 April 2021 9:44 AM GMT)

கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது.  ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஒருபுறம் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.  அதன்பின்னர் நாட்டிலுள்ள முன்னணி மருந்து நிறுவனங்களுடன் மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியே கலந்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தடுப்பூசிகள் பயன்பாட்டை அதிகரிப்பது, கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மாற்று மருத்துவ வழிமுறைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Next Story