காட்டுத்தீயாக பரவி புதிய உச்சம் தொட்டது, கொரோனா இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது


காட்டுத்தீயாக பரவி புதிய உச்சம் தொட்டது, கொரோனா இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 22 April 2021 5:03 AM GMT (Updated: 22 April 2021 5:03 AM GMT)

இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல பரவி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. இது அச்சம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதுவரை நாடு சந்தித்திராத அளவில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த தொற்று பாதித்து வருகிறது. நேற்று கொரோனா காட்டுத்தீ போல பரவி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சரியாக 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (2 லட்சத்து 59 ஆயிரத்து 170) இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 36 ஆயிரம் அதிகம் என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி இருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நாட்டில் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை, 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்து இருக்கிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் 16 லட்சத்து 39 ஆயிரத்து 357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பது, இந்தியாவில் பரிசோதனைகள் வேகம் எடுத்திருப்பதை காட்டுகிறது.

நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,716 பேர் பலியாகி இருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்து எகிறி இருக்கிறது. சரியாக 2 ஆயிரத்து 23 பேர் பலியாகி உள்ளனர். இதுதான் கொரோனா இறப்பில் இந்தியா கண்டுள்ள உச்ச எண்ணிக்கை ஆகும்.

இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மராட்டியத்தில் மட்டுமே 519 பேர் பலியாகி இருப்பது அந்த மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மராட்டியத்தைத் தொடர்ந்து டெல்லியில் 277 பேர், சத்தீஷ்காரில் 191 பேர், உத்தரபிரதேசத்தில் 162 பேர், கர்நாடகத்தில் 149 பேர், குஜராத்தில் 121 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பலிவிகிதம் 1.17 சதவீதமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் கோரத்தாக்குதலில் இருந்து நேற்று நாடு முழுவதும் 1 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39 ஆக அதிகரித்து இருக்கிறது.

நேற்று மராட்டிய மாநிலத்தில் 54 ஆயிரத்து 224 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 19 ஆயிரத்து 430 பேரும், சத்தீஷ்காரில் 18 ஆயிரத்து 746 பேரும், உத்தரபிரதேசத்தில் 14 ஆயிரத்து 391 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 85.01 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்படுவதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று தொடர்ந்து 42-வது நாளாக அதிகரித்து இருக்கிறது. நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 561 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 13.82 சதவீதம் ஆகும்.

மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 6 லட்சத்து 85 ஆயிரத்து 552 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைந்தபட்ச எண்ணிக்கை என்றால் அந்தமான் நிகோபாரில் 159 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

டெல்லி, மும்பை, ஆமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலகாபாத், சூரத் ஆகிய நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் நிரம்பி விட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளே இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஓட்டல்கள், மைதானங்கள் போன்றவை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்படுகின்றன.

புதிதாக 28 ஆயிரத்து 395 பேர் பாதிப்புக்குள்ளாகி, 277 பேரை பலி கொண்டுள்ள டெல்லியில் பல அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கைவசம் உள்ள ஆக்சிஜன் சில மணி நேரத்துக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிப்பது கவலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Next Story