கொரோனா நோயாளிகள் உயிரை காப்பாற்ற மத்திய அரசின் காலடியில் விழத் தயார்; மராட்டிய சுகாதார மந்திரி உருக்கம்


கொரோனா நோயாளிகள் உயிரை காப்பாற்ற மத்திய அரசின் காலடியில் விழத் தயார்; மராட்டிய சுகாதார மந்திரி உருக்கம்
x
தினத்தந்தி 23 April 2021 12:11 AM GMT (Updated: 23 April 2021 12:11 AM GMT)

கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசின் காலடியில் விழத்தயார் என்று மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே உருக்கமாக கூறினார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

கொரோனா நோய் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மராட்டியத்தில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்து வருகிறது. தற்போது சுமார் 7 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையால் மராட்டிய அரசு திணறி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சமீபத்தில் மும்பை அருகே உள்ள நாலச்சோப்ராவில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் வினியோகம் தடைபட்டதால் நேற்று முன்தினம் நாசிக் அரசு ஆஸ்பத்திரியில் 24 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகளின் உயிர் ஊசலாடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

மராட்டிய மந்திரி உருக்கம்

இந்தநிலையில் ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசுக்கு மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நோயாளிகளின் உயிரை காக்க மராட்டிய அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த தருணத்தில் நாங்கள் மத்திய அரசுக்கு மிகவும் தாழ்மையான முறையில் வேண்டுகோள் விடுக்கிறோம். மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலடியில் விழக்கூட மராட்டியம் தயாராக உள்ளது.

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோக உரிமை மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே மராட்டியத்திற்கு போதிய ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் எனது கோரிக்கையை முன்வைக்கிறேன். ஆக்சிஜன் எடுத்து வரும் டேங்கர் லாரிகள் விரைவாக செல்ல தனிவழித்தடத்துக்கும் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோதல் போக்கு

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுடன் மோதல் நிலவி வரும் நிலையில், சமீப நாட்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரச்சினையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story