‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது’; சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா மனு


‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது’; சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா மனு
x
தினத்தந்தி 25 April 2021 7:51 PM GMT (Updated: 25 April 2021 7:51 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கூடுதல் பிரமாண பத்திரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை இயக்க அனுமதி கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.அந்த ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை இயக்க முடியுமா என்பது குறித்து ஏப்ரல் 26-ந் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வக்கீல் இ.சி.அகர்வாலா சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இயக்க அனுமதிக்கக்கூடாது
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை முழு திறனுடன் இயக்க, பயிற்சி பெற்ற, குறைந்தபட்சம் பத்தாண்டு துறைசார் அனுபவம் பெற்ற 45 நபர்கள் தேவை.அந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.2 கோடி பராமரிப்பு செலவாகிறது. எனவே, அனுபவமில்லாத நபர்களைக் கொண்டு அதை இயக்க 
அனுமதிக்கக்கூடாது.ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை இயக்கவும், பராமரிக்கவும் தமிழக அரசிடம் தேவையான நிபுணத்துவமோ, நிபுணர்களோ இல்லை. ஆனால் வேதாந்தா நிறுவனத்திடம் அதற்கு தேவையான நபர்கள் தயாராக உள்ளனர்.

ஆபத்து ஏற்படும்
ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை இயக்க தமிழக அரசை அனுமதித்தால், உற்பத்திக்கூடத்துக்கு மட்டுமின்றி, அதில் பணியாற்றும் நபர்களுக்கும் ஆபத்து ஏற்படும். பயிற்சியற்ற நபர்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை பயன்படுத்த முடியாமல் போகும்.ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தில் அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக்கூட தமிழக அரசு எதிராக இருந்து வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கும் அமைப்பின் கண்காணிப்பின்கீழ் தெரிவிக்கப்படும் காலம் வரை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை ஏற்று நடத்த வேதாந்தா நிறுவனம் தயாராக உள்ளது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லை
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே 28-ந் தேதி சீல் வைத்தது. ஆனால் ஆலையை கையகப்படுத்தவில்லை. ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை இயக்க அனுமதிப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23-ந் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அன்று காலை வரை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் இல்லை. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஆலைக்கு எதிரானவர்கள். சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறவிருந்த நாள் என்பது, காரசார வாக்குவாதம் ஏற்பட காரணமாக அமைந்தது. அதை மட்டுமே பொதுமக்களின் கருத்தாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசின் கடமை.

இவ்வாறு அந்த கூடுதல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story