மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 71,736 பேர் குணமடைந்தனர்


மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 71,736 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 26 April 2021 9:03 PM GMT (Updated: 26 April 2021 9:03 PM GMT)

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 736 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகினர். புதிய பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்தது.

பாதிப்பு குறைந்தது

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மாநிலத்தில் தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ெதாற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது. அதன்படி மாநிலத்தில் புதிதாக 48 ஆயிரத்து 700 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று மாநிலத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 535 பேருக்கும், 24-ந் தேதி 2 லட்சத்து 77 ஆயிரத்து 610 பேருக்கும் சோதனை செய்யப்பட்டு இருந்தது. எனவே சோதனை குறைக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மாநிலத்தில் இதுவரை 43 லட்சத்து 43 ஆயிரத்து 727 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

71,736 பேர் குணமடைந்தனர்

ஆறுதல் அளிக்கும் வகையில் மாநிலத்தில் நேற்று மட்டும் 71 ஆயிரத்து 736 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை 36 லட்சத்து 1,796 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 74 ஆயிரத்து 770 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் பலி எண்ணிக்கையும் நேற்று குறைந்து உள்ளது. மேலும் 524 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 65 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மராட்டியத்தில் தொற்று பாதித்தவர்களில் 82.92 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.5 விகிதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.


Next Story