கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி அதிகரிப்பு: வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 May 2021 11:57 AM GMT (Updated: 13 May 2021 11:57 AM GMT)

கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் 4 வார காலத்திற்கு பிறகு செலுத்தப்படுகிறது. அதேசமயம் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்றப்பட்டது. பிறகு இந்த இடைவெளியை 6-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. 

இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கும் வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், இரண்டாம் டோசுக்குமான கால அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை பரிந்துரைக்கப்பட்டுள்ள 12-16 வாரங்களுக்குள் செலுத்துமாறு நிபுணர் குழு பரிந்துரைத்தது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் அதன் பாதுகாப்பு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றி அமைக்குமாறு தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்தபடி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், கோவாக்சின் தடுப்பூசிக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story