டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2021 9:03 AM GMT (Updated: 15 May 2021 9:03 AM GMT)

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, தொற்று வேகமாக பரவியதை அடுத்து, கடந்த மூன்று வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 30 சதவீதத்திற்கு மேல் இருந்தது.

தற்போது முழு ஊரடங்கு காரணமாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில், 6,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது. வெறும் 15 நாட்களில், 1,000 ஐ.சி.யு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, டெல்லி மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் முயற்சியால் சாத்தியப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

டெல்லியில், இன்று முதல் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜனை வழங்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, இரண்டு மணி நேரத்தில் வீடு தேடி சென்று ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும்” என்று அவர் கூறினார். 

Next Story