தலைமைச்செயலாளரை திரும்ப அழைத்தது மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவு: மம்தா பானர்ஜி


தலைமைச்செயலாளரை திரும்ப அழைத்தது மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவு: மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 31 May 2021 11:15 AM GMT (Updated: 31 May 2021 11:15 AM GMT)

மேற்கு வங்க தலைமைச் செயலாளரை திரும்ப அழைத்தது மத்திய அரசின் ஒரு தலைபட்சமான முடிவு என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட சென்றிருந்தபோது, கொல்கத்தாவில் ஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியை மட்டும் சந்தித்து விட்டு அவர் சென்று விட்டார். இதற்கு கவர்னர் ஜெகதீப் தாங்கர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வங்காள மாநில அரசின் தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு அதிரடியாக திரும்ப அழைத்தது. இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வுபெற இருந்த அவருக்கு மம்தா அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு 3 மாதம் பதவி நீட்டிப்பு வழங்கியது. இந்த நிலையில் அவரை திரும்பப்பெற்ற மத்திய அரசு 31-ந் தேதி டெல்லிக்கு வரவழைத்துள்ளது. இது மம்தாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச்செயலாளரை திரும்ப அழைப்பது, மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதை காட்டுகிறது மம்தா பானர்ஜி விமர்சித்து இருந்தார். 

இந்த நிலையில், மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைக்கும் உத்தரவை ஏற்க முடியாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும், ஒரு தலைபட்சமானது எனவும் விமர்சித்துள்ளார்.

மம்தா பானர்ஜி எழுதியுள்ள ஐந்து பக்க  கடிதத்தில், 'நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து அதற்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. மேற்குவங்கத்திலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம்.இந்த இக்கட்டான சூழலில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை டெல்லிக்கு அழைக்கும் செயல் ஏற்க முடியாதது. 

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் திடீர் மாற்றம் ஏன். இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒருதலைபட்சமானது. மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story