சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு ரத்து மகிழ்ச்சி அளிக்கிறது; மதிப்பெண் எவ்வாறு மதிப்பிடப்படும்?: சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு ரத்து மகிழ்ச்சி அளிக்கிறது; மதிப்பெண் எவ்வாறு மதிப்பிடப்படும்?: சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 3 Jun 2021 1:20 PM GMT (Updated: 3 Jun 2021 1:20 PM GMT)

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, மதிப்பெண்கள் வழங்குவதற்காக மாணவர்களை எப்படி மதிப்பீடு செய்யப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளது.

தேர்வு ரத்து

கொரோனா பரவல் காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பிளஸ்-2 தேர்வு ஜூலை 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 2 பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையில், மாணவர்களின் நலன் கருதி, இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார்.

இதையடுத்து குஜராத், மத்தியபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து முதல்-மந்திரிகள் உத்தரவி்ட்டனர். தமிழகத்தில் பொதுத்தேர்வு நிலைப்பாடு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்பட உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதனிடையே கொரோனா 2-வது அலை காரணமாக, சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேர்வு ரத்து கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், மதிப்பெண் வழங்குவதற்காக மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகள் என்ன என்பதை பார்க்க விரும்புகிறோம்.

2 வாரங்களில் முடிவு

மாணவர்கள் இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் சேர உள்ளதால், அவர்களை மதிப்பீடு செய்வதற்கு நிறைய அவகாசம் வழங்க முடியாது. மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 2 வாரங்களில் அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் இந்த முடிவுகள், மாநில பாடத்திட்ட பிளஸ்-2 தேர்வுகளை ரத்து செய்யும் மாநில அரசுகளுக்கும் வழிகாட்டியாய் அமையும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Next Story