மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி


மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 5:56 PM GMT (Updated: 10 Jun 2021 5:56 PM GMT)

மும்பையில் பலத்த மழையை தொடர்ந்து குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 8 சிறுவர், சிறுமிகள் உள்பட 12 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

குடியிருப்பு கட்டிடம்
மராட்டிய தலைநகர் மும்பையில் முன்தினம் பலத்த மழைபெய்தது. அன்று காலை முதல் மாலை வரை விடாமல் கொட்டி தீர்த்த மழையால் நகரமே வெள்ளக்காடானது. சாலைகள், தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் மலாடு, மால்வாணி அப்துல் ஹமீத் ரோட்டில் உள்ள நியூ கலெக்டர் காம்பவுன்டில் 3 மாடி கட்டிடத்தின் 2, 3-வது மாடிகள் திடீரென இடிந்து விழுந்தன. இந்த கட்டிடம் அருகே உள்ள ஒரு வீடு மீதும் விழுந்து அமுக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடம் சரிந்து விழுந்ததால் அதில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்தநிலையில் கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராடினர்.

12 பேர் பலி
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை துரிதகதியில் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய, விடிய நடந்த மீட்பு பணி நேற்று இரவு வரை நீடித்தது. அப்போது இடிபாடுகளில் இருந்து 12 பேரை பிணமாக மீட்டனர். இதில் 8 பேர் சிறுவர், சிறுமிகள் ஆவர்.உயிரிழந்தவர்கள் சாகில் சர்பராஸ்(வயது9), ஆரிபா(9), சபிக் சலீம்(45), தவுபிக்(15), ஆலிசா(10), அல்பிசா(1½), அபினா(6), இஸ்ரத் பானு(40), ரகிசா பானு(40), தகசிஸ் சேக்(12), ஜான் இரான்னா(13) மற்றும் 60 வயது முதியவர் என தெரியவந்தது.மேலும் மாரிகுமாரி(30), தனலெட்சுமி பேபி(56), சூர்யமணி(39), சலிம்(49), ரிஸ்வானா (33), கரிம் கான், குல்சர் ஆகிய 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடும்பத்தை பறிகொடுத்தவர்
இதற்கிடையே ரபிக் சேக்(45) என்பவர் தனது மனைவி, அண்ணன், அண்ணி மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 குழந்தைகள் என 9 பேரை கட்டிட விபத்தில் பறிகொடுத்து விட்டு தவித்து வருகிறார். இவர் துயர சம்பவம் நடந்த போது கடைக்கு சென்று இருந்தது தெரியவந்தது.இடிந்து விழுந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என போலீஸ் இணை கமிஷனர் விஸ்வாஸ் நங்கிரே கூறினார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் கட்டிட உரிமையாளர், ஒப்பந்ததாரர் மீது கொலை அல்லாத மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஒப்பந்ததாரரான ரம்ஜான் சேக் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.கடந்த மாதம் மும்பையை தாக்கிய ‘டவ்தே’ புயல் மழையின்போதே இந்த கட்டிடம் சேதம் அடைந்து உள்ளது. ஆனாலும் அதில் வசித்தவர்கள் எச்சரிக்கை அடையாததே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

பிரதமர், முதல்-மந்திரி இரங்கல்
இந்தநிலையில் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர், ‘‘மும்பை மலாடு மேற்கு பகுதியில் கட்டிட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனையை அளிக்கிறது. இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நினைத்து பார்க்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்’’ என கூறியுள்ளார்.மேலும் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்து உள்ளார்.இதேபோல முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சதாப்தி ஆஸ்பத்திரியில்சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ள உத்தவ் தாக்கரே, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவு அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

தீராத சோகம்
மும்பை பெருநகர பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாய் உயிரிழக்கும் சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது. சட்டவிரோத கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததே இந்த தீராத சோகத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கிய முதல் நாளே கட்டிடம் இடிந்து 12 பேர் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

Next Story