கர்நாடகத்தில், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டினரை இரும்புக்கரம் கொண்டு வெளியேற்றுவேன்: முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி


கர்நாடகத்தில், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டினரை இரும்புக்கரம் கொண்டு வெளியேற்றுவேன்: முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2021 1:13 AM GMT (Updated: 14 Jun 2021 1:13 AM GMT)

கர்நாடகத்தில், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டினரை இரும்புக்கரம் கொண்டு வெளியேற்றுவேன் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

இந்தியாவின் அண்டை நாடு
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக பலர் குடியேறி உள்ளதாகவும், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறையும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவும் எச்சரித்தது.இதையடுத்து நாடு 
முழுவதும் கடந்த சில வருடங்களாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டினரை கண்டறிந்து அவர்களை வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்பும் பணியில் மத்திய, மாநில போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் கர்நாடகத்திலும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு தீவிர சோதனை நடத்தினர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள்
அப்போது நூற்றுக்கணக்கான வங்காளதேசத்தினரை போலீசார் பிடித்தனர். சட்டவிரோதமாக குடியேறிய அவர்களை பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே சொண்டேகொப்பாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் மையத்தில் அடைத்தனர். அங்கு அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார்களா என்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதையடுத்து அவர்கள் கோர்ட்டு உத்தரவின்பேரில் வங்காளதேச நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். அதன்பின்னரும் தொடர்ந்து கர்நாடகத்தில் ஏராளமான வங்காளதேசத்தினர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் பிடித்து நாடு கடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதன்பேரில் கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காளதேசத்தினரை தேடி கண்டுபிடிக்கும்படி போலீசாருக்கு அரசு 
உத்தரவிட்டுள்ளது.

இரும்புக்கரம் கொண்டு வெளியேற்றுவேன்
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஹாசன், சிவமொக்கா ஆகிய மாவட்டங்களுக்கு வந்துள்ளார். நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவுக்கு வந்த முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கர்நாடகத்தில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் வங்காளதேச நாட்டினர் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அவர்களின் கேள்விக்கு பதிலளித்து முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

கர்நாடகத்திற்குள் வங்காளதேச நாட்டினர் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவது பற்றி எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கர்நாடகத்தை விட்டு வெளியேற்ற எந்த எல்லை வரை செல்ல வேண்டுமோ அதுவரை சென்று நடவடிக்கை எடுப்பேன். இரும்புக்கரம் கொண்டு அவர்களை வெளியேற்றுவேன்.

தளர்வுகள் அமல்
கர்நாடகத்தில் நாளை(இன்று) முதல் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. அடுத்த சில நாட்களில் கொரோனா பரவலின் தாக்கம் பற்றி ஆராய்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தளர்வுகள் நீட்டிக்கப்படுமா? அல்லது மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா? என்பது குறித்து அறிவிக்கப்படும். மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகள் போல இந்த ஆண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும். ஆண்டவன் கருணையால் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்ப வேண்டும்.மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். விவசாயிகளுக்கான நல்ல காலம் விரைவில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story