அமித்ஷாவுடன் மேற்கு வங்காள கவர்னர் சந்திப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jun 2021 7:46 PM GMT (Updated: 19 Jun 2021 7:46 PM GMT)

3 நாட்களில் 2-வது முறையாக அமித்ஷாவை, மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேரில் சந்தித்தார்.

புதுடெல்லி, 

மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் அரசியல் வன்முறை தொடர்பாக அம்மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கருக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, கவர்னர் ஜெகதீப் தாங்கர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டெல்லிக்கு சென்றார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் டெல்லி செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்தார். பின்னர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கடந்த வியாழக்கிழமை சந்தித்தார். மேற்கு வங்காள சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்தநிலையில், டெல்லியில் முகாமிட்டுள்ள கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேற்று 2-வது தடவையாக அமித்ஷாவை சந்தித்தார். பா.ஜனதா தொண்டர்கள் மீதான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் தாக்குதலால் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அமித்ஷாவுடன் அவர் விவாதித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story