சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ஏன் நடத்தக்கூடாது? சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் தரப்பில் வாதம்


சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ஏன் நடத்தக்கூடாது? சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் தரப்பில் வாதம்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:10 PM GMT (Updated: 21 Jun 2021 2:32 PM GMT)

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தரப்பினர், கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இரட்டை முககவசம் அணிய வைத்து ஏன் தேர்வை நடத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர்.

மதிப்பெண் மதிப்பீடு

கொரோனா 2-ம் அலை காரணமாக சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேநேரத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்வதற்கு என சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் தரப்பில் அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழுவானது சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு அறிக்கையை தாக்க செய்தது. அதில், “10, 11, 12-ம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாசார அடிப்படையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண்களாக வழங்கப்படும்” என தெரிவித்திருந்தது.

மாணவர்கள் எதிர்ப்பு

இந்த மதிப்பெண் கணிக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமாக 12-ம் வகுப்பு பொது தேர்வுகளின் மதிப்பெண்கள் இருக்கிறது. அதனால் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் முறையை மாணவர்கள் விரும்பவில்லை. அதில் அவர்களுக்கு திருப்தியும் கிடையாது. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக தான் கருதுகிறார்கள். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை முககவசம் அணிய வைத்தும், அதிகப்படியான மையங்களை அமைத்தும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் தேர்வுகளை கண்டிப்பாக நடத்தலாம்” என வாதிடப்பட்டது.

தள்ளிவைப்பு

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “இந்த விவகாரத்தில் உடனடியாக இறுதி முடிவு எடுக்க வேண்டியுள்ளது. மேலும் இது குறித்து மத்திய அரசின் தலைமை வக்கீலின் கருத்துகளையும் கேட்க வேண்டியது அவசியமாக இருக்கிறது” என கூறி வழக்கு விசாரணையை நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story