மராட்டிய சட்டசபையில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து பா.ஜனதா நடத்திய போட்டி சட்டசபை கூட்டம்


மராட்டிய சட்டசபையில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து பா.ஜனதா நடத்திய போட்டி சட்டசபை கூட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 9:24 PM GMT (Updated: 6 July 2021 9:24 PM GMT)

மராட்டிய சட்டசபையில் இருந்து 12 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று பா.ஜனதாவினர் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இடைநீக்கம்
மராட்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரை கொரோனா பரவல் காரணமாக சுருக்கமாக 2 நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்து, நேற்று முன்தினம் தொடங்கியது. சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் தோல்விகளை முன்வைத்து பா.ஜனதா பேச முயன்றபோது முதல் நாளிலேயே கடும் அமளி ஏற்பட்டது. மேலும் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அறைக்கு சென்ற பா.ஜனதாவினர் அவரை முற்றுகையிட்டு தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ஓராண்டு காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை முன்வைத்து, பா.ஜனதாவின் பலத்தை குறைக்கும் முயற்சி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.

போட்டி சட்டசபை கூட்டம்
இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று 2-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இதை எதிர்க்கட்சியான பா.ஜனதா புறக்கணித்தது. ஆனால் சட்டசபை வளாகத்திற்கு வந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அங்கு போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தி தங்களது எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீதான இடைநீக்கத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போட்டி சட்டசபை கூட்டத்திற்கு காளிதாஸ் கோலம்கர் எம்.எல்.ஏ. சபாநாயகராக செயல்பட்டார். கூட்டணி அரசுக்கு எதிராக தீ்ர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம் நடத்துவதற்கு சட்டசபையில் ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போட்டி சட்டசபை கூட்டத்தினர் பயன்படுத்திய ஒலிபெருக்கியை பறிமுதல் செய்யவும், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும்படியும் அதிகாரிகளுக்கு தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் உத்தரவிட்டார்.

இந்த பரபரப்பு சம்பவங்களால் மராட்டிய சட்டசபை வளாத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story