மேற்கு வங்காளத்தில் பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த என்ஜினீயர்கள்


மேற்கு வங்காளத்தில் பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த என்ஜினீயர்கள்
x
தினத்தந்தி 24 July 2021 5:52 PM GMT (Updated: 24 July 2021 5:52 PM GMT)

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதுவும் கொரோனாவுக்குப்பின் இந்த அவலம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்காளத்தில் பிணவறை உதவியாளர் பணியிடங்களுக்கு என்ஜினீயர்கள், முதுநிலை பட்டதாரிகள், பட்டதாரிகள் என உயர்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பித்து இருக்கும் பரிதாப நிலை நிகழ்ந்துள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பிணவறை தடயவியல் பரிசோதனைக்கூடத்தில் 6 உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.ஆனால் இந்த பணிக்கு 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் சுமார் 100 பேர் என்ஜினீயர்கள், 500 முதுநிலை பட்டதாரிகள், 2,200 பட்டதாரிகள் ஆவர்.

பிணங்களை கையாளும் பணிக்கு உயர்ந்த கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பித்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அவர்கள், 84 பெண்கள் உள்பட 784 பேருக்கு மட்டுமே எழுத்து தேர்வுக்கான கடிதம் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த பணியில் இருப்போரின் குடும்பத்தினர் மட்டுமே வழக்கமாக இந்த பணிக்கு விண்ணப்பிப்பார்கள் எனக்கூறியுள்ள அவர்கள், ஆனால் முதல் முறையாக அதிக கல்வித்தகுதி கொண்ட ஏராளமானோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் இது வேலையில்லா திண்டாட்டத்தின் அவலத்தை காட்டுவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Next Story