கொரோனா ஊரடங்கால் இந்திய பெண்களின் ஊட்டச்சத்து பாதிப்பு; ஆய்வு முடிவு


கொரோனா ஊரடங்கால் இந்திய பெண்களின் ஊட்டச்சத்து பாதிப்பு; ஆய்வு முடிவு
x
தினத்தந்தி 29 July 2021 11:27 PM GMT (Updated: 29 July 2021 11:27 PM GMT)

கொரோனா ஊரடங்கால் இந்திய பெண்களின் ஊட்டச்சத்து பாதித்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

கொரோனா ஊரடங்கு ஆய்வு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க நாடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி தொடங்கி வரலாறு காணாத நீண்டதொரு பொதுமுடக்கம், ஊரடங்கை சந்தித்தது.இதையொட்டி டெல்லியில் உள்ள டாட்டா கார்னல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர். உணவுப்பொருட்கள் மீதான செலவினங்கள், உணவு பன்முகத்தன்மை, தேசிய, மாநில மற்றும் உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து குறிகாட்டிகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்துள்ளனர்.

குறைவான ஊட்டச்சத்து
இந்த ஆய்வின் முடிவுகள் ‘எக்கனாமியா பொலிடிக்கா’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:-

* ஊரடங்கில் இருந்து உணவுப்பொருட்கள் வினியோக சங்கிலி மற்றும் அதனுடன் சேர்ந்த செயல்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பெண்கள் 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டில் ஊட்டச்சத்து உணவுகளை குறைவாகவே எடுத்துக்கொண்டுள்ளனர்.

* ஊரடங்கால் இந்திய பெண்களின் ஊட்டச்சத்து குறைந்துள்ளது. அவர்கள் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள இறைச்சிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குறைந்த அளவில்தான் சாப்பிட்டிருக்கிறார்கள்.

அங்கன்வாடி மையங்கள் மூடல்

* ஊரடங்கின்போது அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால் சமத்துவமற்ற சுமை பெண்கள் மீது ஏற்றப்பட்டது. இந்த மையங்கள் பாலூட்டும் பெண்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் சமைத்த சூடான உணவுகளை வழங்குவது வழக்கம். இது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துக்கான முக்கிய ஆதாரம் ஆகும்.

* கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 90 சதவீதத்தினர் குறைவான உணவையே பெற்றதாகவும், 95 சதவீதத்தினர் குறைவான வகையிலான உணவுகளையே சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

பழங்கள், காய்கறிகள்

* ஊரடங்கின்போது பருப்பு, பயறு வகைகள் பயன்பாட்டை பாதியாகக் குறைத்து விட்டதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

* வைட்டமின் ஏ அதிகளவில் உள்ள பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுகிற பெண்களின் எண்ணிக்கை 42 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story