கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு வருகை


கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு வருகை
x
தினத்தந்தி 30 July 2021 4:21 PM GMT (Updated: 30 July 2021 4:21 PM GMT)

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கேரளாவுக்கு மத்திய அரசின் நிபுணர் குழுவைச் சேர்ந்த 6 பேர் வருகை தந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக 20,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இன்று கொரோனா பாதிப்பு காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் தொற்று பாதிப்பில் இருந்து 14,651 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 13.61 சதவிகிதமாக உள்ளது. 

இதற்கிடையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற 31-ந்தேதி மற்றும் ஆகஸ்டு 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அந்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். 

கேரளாவில் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், கொரோனா மேலாண்மைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் இந்த குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story