ஆட்சியில் இருக்கும்போது ‘ஜேம்ஸ்பாண்ட்’ போல உளவு பார்க்கும் கட்சி, காங்கிரஸ்: மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி


ஆட்சியில் இருக்கும்போது ‘ஜேம்ஸ்பாண்ட்’ போல உளவு பார்க்கும் கட்சி, காங்கிரஸ்: மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி
x
தினத்தந்தி 2 Aug 2021 1:10 AM GMT (Updated: 2 Aug 2021 1:10 AM GMT)

பெகாசஸ் விவகாரத்தில் ஆதாரமில்லை என்று கூறியுள்ள மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஜேம்ஸ்பாண்ட் போல உளவு பார்க்கும் என குற்றமும் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் முடக்கம்
இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300 பிரபலங்களின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல் அரசு வட்டாரங்களை கடந்த சில நாட்களாக உலுக்கி வருகிறது. இந்த பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான முக்தர் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது தீவிர உளவு பார்க்கும் வேலைகளை செய்து வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை
நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது. அதேநேரம் மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் திட்டமும் அரசிடம் இல்லை. 13-ந்தேதி வரை நடத்துவதற்கான அலுவல்கள் திட்டமிடப்பட்டு உள்ளன.காங்கிரசும், வேறு சில எதிர்க்கட்சிகளும் அலறி ஓடும் சூத்திரத்தை கையில் எடுத்துள்ளன. மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் நடத்துவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. முதலில் கொரோனா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றார்கள், பின்னர் விவசாயிகள் குறித்து விவாதிக்க கேட்டார்கள். பின்னர் அதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

புனையப்பட்ட குற்றச்சாட்டு
நாட்டின் பல பகுதிகளில் வெள்ளச்சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்தோ, அல்லது அவர்கள் கூறி வரும் விலைவாசி உயர்வு குறித்தோ விவாதிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆனால் ஆதாரமற்ற போலியானதும், புனையப்பட்டதுமான பெகாசஸ் பிரச்சினையை எழுப்பி நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்க விரும்புகின்றனர். இந்த விவகாரத்தை தகவல் தொழில்நுட்ப மந்திரி அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி விட்டார்.இதை ஏற்காமல் அமளி மற்றும் வன்முறை பாணியை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். சில எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான முறையில் செயல்பட 
விரும்புகின்றன. ஆனால் தனது எதிர்மறை எண்ணத்தை பரப்பி அவர்களையும் காங்கிரஸ்தான் தவறாக வழிநடத்துகிறது. தன்னைத்தானே எதிர்க்கட்சி தலைவராக நிறுவ காங்கிரஸ் முயல்கிறது.

சொந்த மந்திரியே குற்றச்சாட்டு
இவர்கள் (காங்கிரசார்) ஆட்சியில் இருந்தபோது ஜேம்ஸ்பாண்ட் போல உளவு பார்த்து வந்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உளவு பார்க்கப்பட்டதாக, சொந்த நிதி மந்திரியே குற்றம் சாட்டினார். இப்படி அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் உளவு குற்றச்சாட்டை எழுப்பி பிரச்சினையாக்கி வருகின்றனர்.அப்படித்தான் எந்தவித ஆதாரமும் இல்லை என்றாலும், தற்போதும் இந்த குற்றச்சாட்டை எழுப்பி அதுபோன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டினார்.

Next Story