கிழக்கு லடாக் பிரச்சனையில் விரைவாக தீர்வு காண இந்திய-சீனா ராணுவம் ஒப்புதல்


கிழக்கு லடாக் பிரச்சனையில் விரைவாக தீர்வு காண இந்திய-சீனா ராணுவம் ஒப்புதல்
x
தினத்தந்தி 3 Aug 2021 12:22 AM GMT (Updated: 3 Aug 2021 12:22 AM GMT)

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இரு நாடுகளிடையே தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.

எனினும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையை தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் இரு நாடுகளும் தொடர்ந்து வருகின்றன.அந்த வகையில் இரு நாடுகளின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான 12-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் நடந்தது. இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்ததாகவும் கிழக்கு லடாக்கில் மீதம் உள்ள பிரச்சினைகளை விரைவான முறையில் தீர்க்க இந்தியா-சீனா ராணுவம் ஒப்புக்கொண்டதாகவும் இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த சுற்று சந்திப்பு ஆக்கபூர்வமானது என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். இது பரஸ்பர புரிதலை மேலும் மேம்படுத்தியது. மீதம் உள்ள பிரச்சினைகளை ஏற்கனவே 
உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப விரைவாக தீர்க்கவும் பேச்சுவார்த்தைகளின் வேகத்தை பராமரிக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன" என கூறப்பட்டுள்ளது.

Next Story