இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலி - உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்தார்


இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலி - உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்தார்
x
தினத்தந்தி 4 Aug 2021 11:02 PM GMT (Updated: 2021-08-05T04:32:38+05:30)

ஐ.ஐ.டி. உருவாக்கிய இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலிய உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்து வைத்தார்.

டேராடூன்,

நில நடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சரிக்கும் மொபைல் செயலியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது. இப்படி ஒரு செயலி, இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலி 2 வடிவங்களில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இது இணக்கமானது.

இந்த திட்டத்தில் ரூர்கி ஐ.ஐ.டி.க்கு தேவையான உதவிகளை உத்தரகாண்ட் மாநில பேரிடர்மேலாண்மை ஆணையம் செய்தது. இந்த மொபைல் செயலியானது, நில நடுக்கம் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார்படுத்தும். நில நடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போர் இருப்பிடத்தை கூறவும் இது உதவும். நில நடுக்கத்தின் தொடக்கத்தை கண்டறிந்து, குறிப்பிட்ட நில நடுக்கம் ஒரு பகுதியை தாக்குவதற்கு முன்பாகவே இந்த செயலி கண்டுபிடித்து கூறி விடும்.

இதுபற்றி ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி கூறும்போது, “ரூர்கி ஐ.ஐ.டி. நில நடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் மொபைல் செயலியை வடிவமைத்து இருப்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்கம்பக்கம் நில நடுக்கம் நிகழப்போவதை உத்தேச நேரத்துடன், தாக்கத்தின் அளவுடன் இது கூறி விடும். இதனால் அந்த இடத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என கூறி உள்ளார். இந்த செயலியை டேராடூனில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலி ‘உத்தரகாண்ட் பூகம்ப் அலர்ட்’ என்று அழைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Next Story