பெங்களூருவில் 1,817 போலீஸ்காரர்கள் பணி இடமாற்றம் - கமிஷனர் கமல்பந்த் உத்தரவு


பெங்களூருவில் 1,817 போலீஸ்காரர்கள் பணி இடமாற்றம் - கமிஷனர் கமல்பந்த் உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2021 10:51 PM GMT (Updated: 2021-08-06T04:21:02+05:30)

பெங்களூருவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,817 போலீஸ்காரர்களை பணி இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், ஒரே போலீஸ் நிலையத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றும் போலீசாரை மாற்றுவதற்கான பணிகளிலும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 900-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் சமீபத்தில் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் ஒரே நாளில் 1,817 போலீஸ்காரர்களை பணி இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பெங்களூருவில் 127 சப்-இன்ஸ்பெக்டர்கள், 130 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 561 ஏட்டுகள் உள்பட 1817 போலீசார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரே போலீஸ் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய போலீஸ்காரர்கள் தான் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக அந்த போலீஸ்காரர்களுக்கு, துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன்பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

அதே நேரத்தில் போலீஸ்காரர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், அவ்வாறு மாற்றப்பட்ட பலருக்கு பதவி உயர்வு வழங்கியும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பெங்களூரு நகர் முழுவதும் 858 போலீஸ்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அதன்படி, 126 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 281 ஏட்டுகள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாகவும், 446 முதல்நிலை போலீஸ்காரர்கள், ஏட்டுகளாகவும் பணி உயர்வு பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

Next Story